தினம் ஒரு கதை - கண்ணாடி

ஸென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். தனக்குள், "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால் எப்பொழுது அஞ்ஞானத்தை விலக்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது?" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

துறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் மடாதிபதியின் முகம் போன போக்கை பார்ப்பதற்கு அருகிலிருந்த துறவியைத் தவிர வேறு யாரும் இல்லை.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை